சினிமாவில் பிரகாஷ் ராஜ் உயிர் பிழைப்பது போல ராஜசெகர ரெட்டி வர வேண்டும்-விஜய நிர்மலா

|


தூக்குடு படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கோமாவில் விழுந்து 20 ஆண்டுகளுக்குப் பின் பிழைத்து வந்து எதிரிகளைப் பந்தாடுவது போல ராஜசேகர ரெட்டியும் பிழைத்து வந்து தனது எதிரிகளைப் பந்தாட வேண்டும் என்று பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா கூறியுள்ளார்.

எலந்தப் பழம் பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் விஜய நிர்மலா. இவர் ஹைதராபாத்தில் நடந்த பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தூக்குடு படத்தின் 50வது நாள் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. படத்தில் மகேஷ்பாபு தந்தையாக நடித்துள்ள பிரகாஷ்ராஜை வில்லன்கள் அடித்து தூக்கி வீசுவார்கள். காட்டுவாசிகள் அவரை காப்பாற்றுவார்கள். 20 ஆண்டு கோமாவில் இருந்து மீண்டு எதிரிகளை பழி வாங்குவார்.

அதேபோல ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராஜசேகரரெட்டி மீண்டும் உயிரோடு வரமாட்டாரா? என்ற ஆசை எனக்கு எழுந்தது. அவரை ஆந்திர மக்கள் மறக்கவில்லை. அவரின் பல நல்ல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது.

இப்போது ஆந்திரா பல சோதனைகளை சந்தித்து வருகிறது. அதில் இருந்து ஆந்திர மக்களை காப்பாற்ற ராஜசேகரரெட்டி உயிருடன் எழுந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனது ஆசை பேராசையாக இருந்தாலும் சினிமாவில் வருவதுபோல அப்படி நடக்கக்கூடாதா? என நினைக்கிறேன் என்றார் விஜய நிர்மலா.

மகேஷ் பாபு பழம் பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். விஜய நிர்மலா, கிருஷ்ணாவின் 2வது மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment