3 படம் மீது மேலும் ஒரு புகார்... தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு

|


3 Movie
3 பட விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த முறை வேறு ஒரு விவகாரத்தில் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சகோதரி விமல கீதா, தனுஷ் குடும்பத்தாரின் பட நிறுவனமான ஆர்.கே.புரடக்ஷன்ஸ் மற்றும் சோனி மியூசிக் நிறுவனம் ஆகியோர் மீது ஹைதராபாத்தில் நட்டி குமார் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நட்டி குமார். இவர் என்.கே. தியேட்டர்ஸ் பிரைவைட் லிமிட்டெட் என்ற விநியோகஸ்த நிறுவனத்தை வைத்துள்ளார். 3 படத்தின் ஆந்திர உரிமையை இவர்தான் வாங்கியுள்ளார். இதில் தனக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக நட்டி குமார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நட்டி குமார். அதில்,

ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் 3 படத்தை தயாரித்தது. இதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் தமிழில் தயாரிக்கப்பட்டது.

30.3.2012 அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றது. இதற்கான ஒப்பந்தம் 21.3.2012 அன்று கையெழுத்தானது.

தெலுங்கில் இப்படத்தின் ஆடியோ உரிமையும் எங்களுக்கே வழங்கப்பட்டது. இதற்கான தொகை ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டது. பின்னர் ஆடியோ உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்துவகை உரிமைகளையும் அவர்களிடமே விற்றுவிட்டோம்.

ஆனால், எங்களுக்கு தெரியாமலேயே ஆர்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வேண்டிய நிறுவனமான உண்டார் பிலிம்ஸ் நிறுவனம், 3 படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. அந்த நிறுவனம் 3 பட ஆடியோ சிடிக்களை தயாரித்து சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளது.

விசாரித்ததில் சோனி மியூசிக் நிறுவனம் ஆர்.கே. புராடக்ஷன்ஸ் மற்றும், உண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த உரிமையை பெற்றுள்ளது தெரிய வந்தது.

மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் எங்களை ஏமாற்றி சோனி நிறுவனத்துக்கு விற்றிருக்கிறது. நம்பிக்கை துரோகம் மோசடி மூலம் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 3 பட ஆடியோ உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததன் மூலம் மேற்கண்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் லாபம் அடைந்துள்ளனர்.

எனவே, மேற்கண்டவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தப் புதிய புகார் தொடர்பாக 3 பட யூனிட் மீண்டும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
Posted by: Arivalagan
 

Post a Comment