தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போக்கினை சன் தொலைக்காட்சி எப்பொழுதுதான் மாற்றிக்கொள்ளுமோ தெரியவில்லை. தனது சேனலைத் தவிர பிற சேனல்களை மக்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பகீரதப் பிரயத்தனம் செய்து அரதப் பழசாக இருந்தாலும் அதேபோன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி மக்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொள்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஜூன் 29,30 தேதிகளில் விஜய் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்து கிடந்த இந்த நிகழ்ச்சிக்கு டி ஆர் பி கிடைத்து விடக்கூடாதே என்ற போட்டி மனப்பான்மையில் சன் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒன்றான கே டிவியில் இயக்குநர் சங்கத்தின் 40 ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் வேறொரு நாளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த அரதப் பழசான இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ததன் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொண்டது சன் குழுமம்.
கலர்ஃபுல் நடனம், அட்டகாசமான பாடல்கள் என களை கட்டிய விஜய் டிவி விருது நிகழ்ச்சிக்கே ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று தெரிந்தும் டி 40 நிகழ்ச்சியை கேடிவியில் ஒளிபரப்ப காரணம் என்ன என்பதுதான் பெரும்பாலோனோர் கேள்வியாகும்.
வெள்ளிக்கிழமை சன் டிவியில் சீரியலுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மாற்ற முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கேடிவியில் ஒளிபரப்பானது டி 40 நிகழ்ச்சி என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர். எது எப்படியோ ஆளே இல்லாத டீ கடைக்கு எதுக்குடா டீ ஆத்துறீங்க? என்று விவேக் கேட்பதைப் போல மக்களே பார்க்க விரும்பாத ஒரு நிகழ்ச்சியை ஏன் மறுபடி மறுபடி சன் குழுமத்தில் ஒளிபரப்பு செய்கின்றனர்? என்பதே தொலைக்காட்சி ரசிகர்களின் கேள்வியாகும்.
Post a Comment