படப்பிடிப்பில் பரிதாபம்.. 2 துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி பலி

|


மன்னார்குடி: மன்னார்குடி அருகே படப்பிடிப்பிற்கு சென்ற இரண்டு துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
களவாணி படத்தை இயக்கியவர் இயக்குநர் சற்குணம். இவர் வாகை சூடாவா படத்திற்குப் பின் நையாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். வருகிறார். இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கிராம புறங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடைமேலையூர் என்ற கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குநர் சற்குணன் சென்னைக்கு சென்று விட்டதால் இன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் எடைமேலையூரில் உள்ள கிராமத்தில் உள்ள குளத்திற்கு நையாண்டி படத்தில் துணை நடிகைகளாக நடித்து வந்த சென்னையை சேர்ந்த சரஸ்வதி (24), விஜி (21) மற்றும் சுகன்யா (22) ஆகிய 3 பேரும் குளிக்க சென்றனர். இவர்கள் மூன்று பேருக்குமே நீச்சல் தெரியாது. முன்பகுதியில் குளித்த அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கவே குளத்தில் காட்டா மணக்கு செடிகளில் சிக்கி மூழ்கினர்.
இதில் சரஸ்வதி, விஜி ஆகிய இருவரும் குளத்திலேயே மூழ்கி இறந்தனர். சுகன்யா குளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சுகன்யா தத்தளிப்பதை பார்த்து குளத்தில் இறங்கி சுகன்யாவை காப்பாற்றினர். சரஸ்வதி, விஜி ஆகியோரின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரஸ்வதி, விஜி ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். சுன்யாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவி உள்ளது. மேலும் சினிமா துணை நடிகைகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
 

Post a Comment