மும்பை: மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதால், விதிக்கப்பட்ட கெடு தேதியான மே 15-ம் தேதி சிறைக்குப் போகிறார் சஞ்சய் தத்.
மும்பையில் 1993-ல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதற்காக ஏராளமான துப்பாக்கிகளை கொண்டு வந்தனர். அதில் 2 துப்பாக்கிகளை நடிகர் சஞ்சய்தத் சட்ட விரோதமாக வாங்கினார். மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததும் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதித்து மும்பை தடா கோர்ட்டு உத்தரவிட்டார்.
ஒன்றரை ஆண்டுகள் எரவாடா சிறையில் இருந்த சஞ்சய்தத் பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். உச்சநீதிமன்றத்தில் தன் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார். அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது.
தண்டனை ஏற்றுக் கொள்வதாக முதலில் அறிவித்த சஞ்சய் தத், பின்னர் சரணடைய அவகாசம் கேட்டார். நான்குவார அவகாசம் அளித்தது நீதிமன்றம்.
பின்னர் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சஞ்சய்தத் மீண்டும் மனு செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் வாதத்துக்குப் பிறகு சஞ்சய்தத் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக சஞ்சய்தத் இனி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வருகிற 15-ந்தேதி அவர் சரண் அடைகிறார். சரண் அடைந்ததும், அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பப்படுவார். மீதமுள்ள தண்டனை காலமான 3.5 ஆண்டுகளை அவர் சிறையில் கழிக்க வேண்டும்.
54 வயதாகும் சஞ்சய்தத் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். 250 கோடி ரூபாய்க்கு மேல் அவரை நம்பி முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
சிறைக்குப் போகும் முன்பே தனது சினிமா கமிட்மெண்டுகளை பெருமளவு முடித்துவிட்டார் சஞ்சய் தத். கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் போலீஸ்கிரி இந்திப் படமும் அதில் ஒன்று!
Post a Comment