பெங்களூர் பிரபலமான லயன் டேட்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 80,000 பணத்தை மோசடியாக பெற்றதாக நடிகை லீலா மரியா பாலின் காதலன் சுகாஷ் சந்திரசேகர் மீது ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாஷ் மீது வழக்கும் நிலுவையில் உள்ளதாம்.அதுகுறித்துதம் தற்போது பெங்களூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை லீனா மரியா பால். ரூ.19 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.
அவரும் அவரது காதலர் சுகேஷ் சந்திரசேகரும் சேர்ந்து பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில் சுகாஷ் செய்தமேலும் ஒரு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லீனா பால் ஏற்கனவே கைதாகி விட்ட நிலையில் சுகாஷ் மட்டும் இன்னும் கைதாகாமல் தலைமறைவாகவே இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் லயன்டேட்ஸ் மோசடி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் வி்தான செளதா போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்தது லயன் டேட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கொடுத்த வழக்குதான் விதான செளதா காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வழக்கை சிசிபி போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார் பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி.
முன்னதாக லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, கடந்த ஜனவரி 11ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது....
ஜெயக்குமார் என்ற நபர் 09916725484 என்ற எண்ணிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டார். தான் கர்நாடக முதல்வரின் இணைச்செயலாளர் என்றும், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறிக் கொண்டார்.
கர்நாடக அரசு ஒரு வருட காலத்திற்கு மாதந்தோறும் ரூ. 5 லட்சத்திற்கு 500 கிராம் எடை கொண்ட பேரீச்சம் பழ பாக்கெட்களை வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்மொத்த மதிப்பு ரூ. 7 கோடியாகும். பள்ளிக் குழந்தைகளுக்கும், பார்வையற்றோருக்கும் தருவதற்காக இதை வாங்குவதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் அவரது பேச்சை நம்பி சுகாஷ் சந்திரசேகர் என்ற பெயரில் ரூ. 80,000க்கு AQAPL4131C என்ற பேன் எண் கொண்ட, கெங்கேரி ஆந்திரா வங்கி கிளையில் பணம் போட்டோம். அந்தவங்கிக் கணக்கு எண் 1352110004510. அதன் பின்னர் வருடாந்திர உறுப்பிர் தொகையாக ரூ.2.05 லட்சம் கட்டுமாறு அந்த நபர் எங்களிடம் கூறினார்.
ஆனால் இதுகுறித்து முறையாக அரசு லெட்டர் பேடில் கடிதம் அனுப்புமாறு நாங்கள் ஜெயக்குமாருக்கு பலமுறை இமெயில் அனுப்பியும் வரவில்லை. எனவே நாங்கள் கட்டிய ரூ. 80,000 பணத்தை மோசடி செய்து விட்டதாக உணர்ந்து புகார் கொடுக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகார் குறித்தும் தற்போது போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
3 முறை கைதானவரும் கூட
அதேபோல சுகாஷ் 3முறை கைதான மோசடிப் பேர்வழியும் கூட என்ற தகவலும் கசிந்துள்ளது. கடந்த 2007 முதல் 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார் சுகாஷ். ஆனால் மூன்று முறையும் அவர் பெங்களூர் கோர்ட்டில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார்.
இவர் நூற்றுக்கணக்கானோரை மோசடி செய்த பின்னணியைக் கொண்டவர் என்றும் பெங்களூர் போலீஸார் கூறுகின்றனர். இவர் பெங்களூர் பால்ட்வின் பள்ளியில் பியூசி படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் விட்டு விட்டார். அதன்பிறகுதான் மோசடிகளில் குதித்துள்ளார்.
முன்பு ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்று கூறி மோசடி செய்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடாவின் நெருங்கிய நண்பர் என்றும் மோசடி செய்துள்ளார். தமிழக நிதியமைச்சராக இருந்த அன்பழகனின் உறவினர் என்று கூறியும் மோசடி செய்துள்ளார்.
இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு முதல் புகார் பதிவானது. 75 வயதான சுப்ரமணியா என்பவரிடம் பிடிஏ வீட்டு மனையை வாங்கித் தருவதாக கூறி. ரூ. 1.14 கோடி பணத்தை மோசடி செய்து சிக்கினார். மேலும் மோசடியாக ஒரு ஆவணத்தை சுப்ரமணியாவிடம் காட்டி அவரை நம்ப வைத்துள்ளார். இதுதொடர்பாக ஹுலிமாவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் சுகாஷ் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர். ஆனால் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
அதன் பின்னர் 2009ம்ஆண்டு ஒரு தொழிலதிபரை மோசடி செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் என்று கூறி இந்த மோசடியைச் செய்தார் சுகாஷ். அந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் தப்பி விட்டார்.
கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ அருகே வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கருணாநிதியின் மகன் என்று கூறி ரூ. 10 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, ஹரியானாவில் சுகாஷ் மீ்து 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
Post a Comment