மனிதனுக்கு நல்ல காலம் கெட்ட காலம்.. எதுவுமே நிரந்தரமில்லே!- ரஜினி

|

சென்னை: ஒரு மனிதனுக்கு கெட்ட காலமும் வரும் நல்ல காலமும் வரும்... எதுவுமே நிரந்தரமில்லை என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி, கமல் நடித்த 16 வயதினிலே படம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகிறது.

மனிதனுக்கு நல்ல காலம் கெட்ட காலம்.. எதுவுமே நிரந்தரமில்லே!- ரஜினி

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.

விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, பாக்யராஜ் என திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்றனர்.

படத்தின் ட்ரைலரை ரஜினியும் கமலும் சேர்ந்து வெளியிட்டனர். விழாவில் ரஜினி பேசுகையில், "தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப் போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் பணம் யாருக்கு போய் சேரும் என்று கேட்டேன். எனக்குத்தான் என்றார். அப்படியெனில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.

ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ராஜ்கண்ணு, அன்றைக்கே சொந்தமாக ரிலீஸ் செய்தார். கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது.

அதுமட்டுமல்ல, ராஜ்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்ல ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் சிக்கலைச் சந்தித்த போது, 'பதினாறு வயதினிலே படத்தை மறுபடியும் வெளியிட்டு அதில் வரும் பணம் முழுவதையும் கமல்ஹாஸனுக்கே தரப் போகிறேன், என்று சொன்னவர் ராஜ்கண்ணு. தான் கஷ்டத்திலிருந்தாலும், அடுத்தவர் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளாத மனம் அவருக்கு.

தற்போது 16 வயதினிலே மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன். மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும்," என்றார்.

 

Post a Comment