இந்திய சினிமாவில் இன்னுமா இந்த பேதமிருக்கு?

|

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அதுவும் சினிமா - அரசியல் - தமிழ் உணர்வு பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழகத்தில் நடக்கும் சந்திப்பில் எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகமும் லாவகமும் கைவரப்பெற்றவர்களாகக் காட்சி தந்தார்கள் ஆமீர்கானும் அபிஷேக்கும், தூம் 3 பிரஸ் மீட்டில்.

கரணம் தப்பினாலும், Racism என்ற பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

'இங்கிருப்பவர்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளில் நீங்கள் வடக்கத்திகாரங்க.. நாங்க தமிழர்கள்,' என்ற தொனிதான் விரவிக் கிடந்தது. இனி அவர்கள் மறந்தாலும், இவர்கள் விடவே மாட்டார்கள் போலிருக்கிறது.

இந்திய சினிமாவில் இன்னுமா இந்த பேதமிருக்கு?

'வடக்கு தெற்கு என்ற வித்தியாசம் எதுவும் இல்லை. நாங்கள் இந்திய சினிமாவின் ஒரு அங்கம். தமிழ் - இந்தி என்ற வித்தியாசம் எங்களுக்கில்லை. நாங்களும் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறோம். மொழி தெரியாததால் நடிக்கவில்லை. அவ்வளவுதான்,' என்றார்கள்.

கேட்க நன்றாகத்தான் இருந்தது. அவர்கள் சொல்வதும் சரிதான். இப்போதைய சூழலில் பேதங்களின்றி பணியாற்றும் சூழலை, தமிழகத்திலிருந்து போன டெக்னீசியன்கள் மூலம் கேட்க நேர்கிறது. பீகார், வங்காளம், பஞ்சாபிலிருந்து பாலிவுட்டிலோ கோலிவுட்டிலோ கலைஞர்கள் பணியாற்றுவது மாதிரிதான், தென்னகத்திலிருந்து பாலிவுட்டுக்குச் செல்வதும் என்ற இயல்பு நிலை வர கான்களின் ஆதிக்கம் உதவுவது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

தமிழில் நடிக்காதது ஏன் என்பதை அவர்களிடம் ஏதோ ஒரு குற்றமாகவே கேட்டு வைக்கிறார்கள் நம் மக்கள். மொழி தெரியாமல் நடிப்பது எத்தனை பெரிய தவறு என அவர்கள் சொன்னாலும், நம்மவர்கள் விடுவதில்லை. அப்புறம் நடிக்க வந்த பிறகு, தமிழை கொலை பண்றானே எனப் புலம்பி என்ன பயன்!

இன்னொன்று... நானும் ரொம்ப நாளாகப் பார்க்கிறேன்... அது ஏன் வடக்கிலிருந்து யார் வந்தாலும், அவர்களிடம் ஒரு பாராட்டு வேண்டி நிற்கிறது தமிழர்கள் என்றே புரியவில்லை.

வட இந்திய இயக்குநர்கள் - தென் இந்திய இயக்குநர்கள், வித்தியாசம் சொல்லுங்க...

தமிழ் சினிமா பத்தி என்ன நினைக்கிறீங்க... தமிழ்ல நடிப்பீங்களா?

இங்கே உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?

இந்தப் படத்துல எங்காளுங்க யார் நடிச்சிருக்காங்க, வேல செஞ்சிருக்காங்க.. அவங்களோட திறமை பத்தி சொல்லுங்க...

-இதையெல்லாம் கேட்டு என்ன ஆகப் போகிறது? அவர்கள் வந்த வேலை தொடர்பாக கேட்பதை விட்டுவிட்டு... மணிக்கணக்கில் ஜவ்வாக இழுத்து, போதும் போங்கப்பா என ஓடும் நிலைமைக்கு தள்ளுவதே வாடிக்கையாகிவிட்டது. 'பட்டிக்காட்டான் முட்டாய் கடையை முறைச்சுப் பாக்கிற மாதிரி' என்ற பழமொழிக்கும், ஆர்வக் கோளாறு என்ற பதத்துக்கும் அர்த்தம், இந்த மாதிரி தமிழ்நாட்டில் நடக்கும் பாலிவுட் பிரபலங்களின் பிரஸ் மீட்டுக்குப் போனால் தெரிந்து கொள்ளலாம்!

 

Post a Comment