வாங்கிய சம்பளத்தில் 85 லட்சத்தை திருப்பிக்கொடுத்த விமலின் விசால மனசு!

|

பேசிய சம்பளத்துக்கு மேல் எவ்வளவு கறக்க முடியும் என்றுதான் பெரும்பாலான சினிமாக்காரர்கள் யோசிப்பார்கள்.

ஆனால் வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுக்கும் நல்ல மனசு யாருக்கு வரும்? விமலுக்கு அப்படி ஒரு மனசு.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா என பல நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம் ஜன்னல் ஓரம்.

வாங்கிய சம்பளத்தில் 85 லட்சத்தை திருப்பிக்கொடுத்த விமலின் விசால மனசு!

இந்தப் படத்தை கடைசிநேரத்தில் வெளியிட முடியாமல் தவித்தார்கள் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட விமல், உடனடியாக ரூ 65 லட்சம் புரட்டிக் கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் அப்போது கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்தார். அதுவும் போதவில்லை தயாரிப்பாளருக்கு. பின்னர் தனது நண்பர்களிடம் சொல்லி மேலும் ரூ 20 லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார்.

பத்து தையல் மிஷின், ஆடு, மாடு கொடுத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள விளம்பரத்தை சக நடிகர்கள் பெற்று வரும் இன்றைய சூழலில், தான் இப்படி ஒரு பேருதவியைச் செய்ததைக் கூட வெளியில் சொல்லவில்லை விமல்.

கடைசியில் புலிவால் படத்தின் பிரஸ் மீட்டில் சக நடிகரான பிரசன்னா சொல்லித்தான் இது வெளியில் தெரிந்தது.

இதுகுறித்து பேசிய பிரசன்னா, "நானாக இருந்தால் கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டேன். கிட்டத்தட்ட ‘ஜன்னல் ஓரம்' படத்தில் அவர் இலவசமாக நடித்தார் என்றுதான் சொல்ல முடியும். சினிமாவில் விமல் எனக்கு ஜுனியர் என்றாலும் அவரிடம் நான் நிறைய நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன்," என்ற பிரசன்னா கூடவே, "அவருக்கு நிறைய சம்பளம் கொடுக்குறாங்க... அவர் திருப்பிக் கொடுகிறார். எனக்கு எங்க அவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க," என்று புலம்பவும் தவறவில்லை.

 

Post a Comment