இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார் பிரபல இயக்குநர் மகேந்திரன் மற்றும் அவரது மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன்.
இயக்குநர் மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்களாக மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
மகேந்திரன் இயக்கிய சாசனம் தவிர மீதி எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைத்துள்ளார்.
சாசனம் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் எந்தப் படத்தையும் இயக்கவில்லை மகேந்திரன். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் புதிய படத்துக்கான இசைக் கோர்ப்புப் பணிகளில் பிஸியாக உள்ளார் இளையராஜா.
அவரை தன் மகனுடன் சென்று பிரசாத் ஒளிப்பதிவு கூடத்தில் நேரில் சந்தித்தார் இயக்குநர் மகேந்திரன். அவரை இயக்குநர் பாலாவும் கவிஞர் நா முத்துக்குமாரும் வரவேற்று அழைத்துச் சென்னர்.
ஒலிப்பதிவுக் கூடத்தில் அமர்ந்து ராஜாவின் இசைக் கோர்ப்பை ரசித்த மகேந்திரன், பாலா படத்துக்கு ராஜா இசையமைத்த சில புதிய பாடல்களைக் கேட்டு ரசித்தார். இருவரும் சில நிமிடங்கள் தங்களின் அடுத்த படங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
மகேந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்துக்கும் ராஜாதான் இசையமைக்கிறார் என்ற பேச்சுகள் கிளம்பியுள்ளன.
Post a Comment