மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பில் நாம் தமிழர் முற்றுகை.. படப்பிடிப்பு ரத்து!

|

மும்பை: சர்ச்சைக்குரிய இனம் படத்துக்கு எதிராக மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய முற்றுகை காரணமாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இனம் திரைப்படம் தமிழ் உணர்வாளர்களை கொதிப்படை வைத்துள்ளது. அந்தப் படம் முழுக்க தமிழ் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள், தமிழர்களை இழிவாகச் சித்தரிக்கும் காட்சிகள், ராஜபக்சேயின் ராணுவம் நடத்திய இனப்படுகொலையை நியாயப்படுத்தும் காட்சிளே நிறைந்திருக்கின்றன.

மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பில் நாம் தமிழர் முற்றுகை.. படப்பிடிப்பு ரத்து!

இந்தப் படத்துக்கு எதிராக வைகோ மிகக் கடுமையான அறிக்கை வெளியிட்டு எல்லோரையும் அதிர வைத்தார். அடுத்த நாளே படத்தை அனைத்து திரையரங்குகளிலிருந்தும் எடுத்துவிடுவதாக லிங்குசாமி அறிவித்தார்.

இந்நிலையில், லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியாகவிருக்கும் மற்ற படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உலகத் தமிழர் அமைப்புகள் எடுத்துள்ளன.

குறிப்பாக இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் மற்றும் லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் போன்ற படங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ஷூட்டிங் மும்பையின் விடி பகுதியில் நடந்து வருகிறது. இந்த விஷயம் தெரிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு சென்று பிற்பகல் 3 மணிக்கு படக்குழுவை முற்றுகையிட்டனர்.

படக்குழுவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் இனம் படத்தைத் தயாரித்த லிங்குசாமியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தார் லிங்குசாமி.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த நடிகர் சூர்யா அந்த இடத்திலிருந்து உடனே வெளியேறினார்.

இனத்தைக் காட்டிக் கொடுத்து பணம் பார்க்க முயற்சிக்கும் கூட்டத்தில் லிங்குசாமியும் சேர்ந்தது வருத்தத்தைக் கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில நிர்வாகி பொன் கருணாநிதி தெரிவித்தார்.

இனம் படம் அனைத்து திரையரங்குகளிலிருந்தும் தூக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment