நரேந்திர மோடி சினிமாவுக்கு தடை கோரும் காங்கிரஸ்!

|

டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி.

நரேந்திர மோடியின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து ‘நமோ சவ்னே கமோ' (நமோவை அனைவரும் நேசிக்கின்றனர்) என்ற பெயரில் குஜராத்தி மொழி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குஜராத் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த ஷரத் ஷர்மா அசப்பில் மோடி மாதிரிதான் இருந்தார். படத்தின் போஸ்டர்கள் இல்லை எனும் அளவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தார்கள்.

ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்தது.

தேர்தல் தேதி நெருங்கும்போது பரபரப்பாக இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குஜராத் மாவட்ட காங்கிரஸ் சட்டத் துறை ஒருங்கிணைப்பாளர் நிகுஞ்ச் பாலார் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

‘இந்த யுக்தி தேர்தல் காலத்தில் மோடியை விளம்பரப்படுத்தும் பிரசார முயற்சியாகும். ஆனால், இவ்விவகாரத்தில் பா.ஜ.க.வின் பங்கு ஏதுமில்லாதது போல் காட்டிக் கொண்டு, இந்த விளம்பர செலவு முழுவதும் அந்த சினிமாவின் தயாரிப்பாளருடையது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் போக்குக்கு தேர்தல் கமிஷன் இடம் அளித்துவிடக் கூடாது.

எனவே, தேர்தல்கள் நடந்து முடியும் வரை இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்' என்று அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே கோரிக்கையுடன் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சந்தோஷ் சிங் என்பவரும் மாநில தேர்தல் கமிஷனை அணுகியுள்ளார்.

இதற்கிடையில், இந்த படத்தை திரையிடுவதாக இருந்த பல திரையரங்குகள் சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காத வகையில் நேற்றைய ரிலீஸை நிறுத்தி வைத்துவிட்டன.

 

Post a Comment