தமிழகத்தில் மேலும் ஒரு தொலைக்காட்சி சேனல்

|

தூத்துக்குடி: தமிழகத்தில் தொழில் அதிபர் வைகுண்டராஜன் விரைவில் ஒரு தொலைக்காட்சி சேனலை துவங்க உள்ளாராம்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கார்னெட் உள்ளிட்ட கனிமவள வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர் வைகுண்டராஜன். இந்த மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் மற்றும் எஸ்.டி.எஸ்.மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் கார்னெட் ஏற்றுமதியில் ஏகபோகத்தில் உள்ளன. இருந்தாலும் வி.வி. மினரல்ஸ் தான் முதலிடம் வகிக்கின்றது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை, கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் அரிசி ஆலை, லாரிகள் வைத்து சாதாரணமாகத் தொழில் செய்து வந்தார். பின்பு கனிமவள தொழிலில் கால் பதித்தார். அதன் பின்பு தான் இந்திய பணக்காரர்களில் ஒருவர் ஆனார்.

இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வைகுண்டராஜன் மிகவும் எளிமையானவர், காலில் செருப்புக்கூட அணிய மாட்டார். அவரை அணுகி செல்பவர்களுக்கு தேவையான உதவிகளை தாராளமாக செய்வாராம்.

இப்படி பன்முகம் கொண்ட தொழில் அதிபர் வைகுண்டராஜன் முன்பு தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் பின்புலம் கொண்ட தொலைக்காட்சியின் பங்குகளை அதிக அளவில் வைத்திருந்தாராம். மேலும் அந்த தொலைக்காட்சியும், அதனை சார்ந்த அரசியல் கட்சியும் வைகுண்டராஜனுக்கு முன்னுரிமை கொடுத்ததாம்.

இந்த நிலையில் வைகுண்டராஜன் விரைவில் வி.வி. என்ற தொலைக்காட்சி சேனலை துவங்க உள்ளாராம். இதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த நிகழ்ச்சிகள், தொடர்கள், செய்திகள், சமையல், கேள்வி பதில், மருத்துவம், ஆன்மீகம் என பல நிகழ்ச்சிகள் வருமாம்.

இந்த சேனல் துவங்குவதற்கான பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதாம். விரைவில் அரசியல் பெரும் பலம் கொண்ட ஒருவர் இந்த தொலைக்காட்சி சேனலை நல்ல நாளில் துவக்கி வைக்கப் போகின்றாராம். மேலும், இந்த தொலைக்காட்சி சேனல் தனது தொழிலுக்கும் பின்பலமாக இருக்கும் என்று வைகுண்டராஜன் நினைக்கின்றாரம்.

 

Post a Comment