பயங்கர விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. லேசான காயங்களுடன் தப்பினார்!

|

ஹைதராபாத்: பயங்கர விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜ், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸிலிருந்து காரில் நேற்று மாலை சாத்நகர் நோக்கி குடும்பத்துடன் சென்றார் பிரகாஷ் ராஜ்.

மாதாபூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், பிரகாஷ்ராஜ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கியது.

பிரகாஷ் ராஜ் காருக்குப் பக்கத்தில் நின்ற இன்னொரு ஆட்டோவையும் அந்த பஸ் இடித்து தள்ளியது. ஆட்டோ இன்னொரு காரில் மோதி அதுவும் சேதமானது.

இந்த விபத்தில் பிரகாஷ் ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரில் இருந்த குடும்பத்தினரை உடனடியாக கீழே இறக்கி ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

பயங்கர விபத்தில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. லேசான காயங்களுடன் தப்பினார்!

இந்த விபத்து குறித்து பிரகாஷ்ராஜ் ட்விட்டரில், "பயங்கரமான விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து தப்பியது அதிர்ஷ்டம். விபத்து நடந்தபோது கார் ஆட்டோக்களில் இருந்தும், மோட்டார் சைக்கிள்களில் இருந்தும் நிறைய பேர் கீழே விழுந்தனர். அவர்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. இது எனக்கு அதிர்ச்சியளித்தது.

குறிப்பாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் விபத்தை செல்போனில் படம் எடுத்தனர். வெட்கக் கேடு. உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வதுதான் அதிக பயத்தைத் தருகிறது!", என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment