திருவனந்தபுரம்: மலையாள நட்சத்திர தம்பதியான திலீப்-மஞ்சுவாரியாருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு சல்லாபம் படத்தில் சேர்ந்து நடித்த போது, மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியாரும் காதலிக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
சுமார் 16 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டு விலகி இருந்தார் மஞ்சுவாரியார். ஆனால், தொடர்ந்து நடித்து வந்த திலீப்பிற்கும், திருமணமான சிறிது காலத்திலேயே கணவரைப் பிரிந்த காவ்யா மாதவனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் திலீப் - மஞ்சுவாரியாரின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் விவாகரத்து கேட்டு இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் தாஸ் இருவரையும் அழைத்து பேசினார். விவாகரத்து முடிவை மறு பரிசீலனை செய்யும்படி 6 மாதம் அவகாசம் கொடுத்தார்.
அந்த அவகாசம் முடிவடைந்த சூழலில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மஞ்சுவாரியரும், திலீப்பும் நேரில் ஆஜரா னார்கள். நீதிபதியிடம் சேர்ந்து வாழ முடியாது விவாகரத்து வேண்டும் என இருவரும் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், மகள் மீனாட்சி தந்தை திலீப் பொறுப்பில் வளரவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திலீப், செய்தியாளர்களிடம், ‘நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம். தாயார் என்ற முறையில் அவரது மகளை அவர் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்' என்றார்.
Post a Comment