திருச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகி ராயல் ராஜ் உடல் முழுக்க தீச்சட்டி ஏந்திய வேண்டிக் கொண்டார். திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் வெள்ளி ரதம் இழுத்தார்.
சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அன்றே ரஜினி வீடு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ரஜினியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலைபட வேண்டாம் என்று சிகிச்சையளித்த டாக்டர் கிஷோர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அங்காங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலில் இருந்து இன்று காலை திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் ‘ராயல் ராஜ்’ தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றார். உடல் முழுவதும் நட்சத்திர வடிவமைப்பில் 10-க்கும் மேற்பட்ட தீச்சட்டிகளை ஏந்திகொண்டு அவர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக முருகன் கோவில் வரை சென்றார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் பங்கேற்றனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரஜினி உடல் நலமடைய வேண்டி திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் தலைமையில் வெள்ளி ரதம் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆர்.கே.எஸ்.ராஜா, ரஜினி சிவா, தென்னூர் உதயா, நாசர், ஸ்ரீரங்கம் திலீப்ரமேஷ், ரஞ்சித்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment