சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகரன்.
பின்னர் நிருபர்களிடம் எஸ்ஏ சந்திரசேகரன் பேசுகையில், “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ராம.நாராயணன் இருந்த போது, நான் துணைத் தலைவராக இருந்தேன்.
இப்போது ராம.நாராயணன் பதவி விலகியதால், நான் தற்காலிக தலைவராக உள்ளேன். நான் தற்காலிக தலைவராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் பாபுகணேஷ் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் கையெழுத்து போட்டுள்ளது போல, கையெழுத்து போட்டு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் போடப்பட்டுள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை.
அந்த சுற்றறிக்கையில், ‘கேபிள் டி.வி. நடத்துபவரின் கவனத்துக்கு’ என்ற தலைப்பில் சில தகவல்கள் உள்ளன. 2011 முதல் 2012-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் ஒளிபரப்பு உரிமம், சேலம் ‘வீல் மீடியா’ என்ற நிறுவனத்துக்கும், தஞ்சை ‘சேனல் விஷன்’ என்ற நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பொறுப்புகள் மாறிவிட்டாலும், அந்த ஒளிபரப்பு உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாத சந்தாவை கட்டலாம். இப்படிக்கு, எஸ்.ஏ.சந்திரசேகரன் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை.
இதுபோன்ற போலி கையெழுத்து போட்டு சுற்றறிக்கை அனுப்பியவர்கள் யார்? என்று கண்டறிந்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,” என்றார்.
Post a Comment