ஆயிரம் தாமரை மொட்டுக்களால் பாரதிராஜாவுக்கு மரியாதை செய்த பாண்டியராஜன்!

|


இதற்கு முன் பாரதிராஜாவை இப்படி ஒரு நெகிழ்வான மனநிலையில் பார்த்ததில்லை. அந்த அளவு உணர்ச்சிப் பிழம்பாக மாறிப் போயிருந்தார் மனிதர். அவர் பங்கேற்றது ஒரு வழக்கமான இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் என்றாலும், விழாவுக்கு வந்த அவரது சிஷ்யப் பிள்ளைகளும், அபிமானிகளும் அவரது பெருமையை இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் உரத்துச் சொல்ல... இயக்குநர் இமயம் பனியாய் உருகிப் போனதில் ஆச்சர்யமில்லைதான்!

பதினெட்டாம் குடி படத்தின் பாடல் வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினராக பாரதி ராஜா. படத்தின் ஹீரோ, இயக்குநர் - நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்வி. ஏ ஆர் முருகதாஸ், சிங்கம்புலி, சினேகன், ஜெயம் ரவி என திரையுலகின் இன்றைய தலைமுறைக் கலைஞர்கள் நிறைந்திருந்தனர்.

பாண்டியராஜன் மைக் பிடித்ததுமே மகனைக் கூட மறந்துவிட்டு, பாரதிராஜா என்ற கலைஞனின் திரையுலக பங்களிப்பை பேச ஆரம்பித்தார்.

"என்னைப் போன்றவர்கள் இந்த சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக தாக்குப் பிடிக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் பாரதிராஜாதான் என்து நூறு சதவீதம் மிகைப்படுத்தப்படாத உண்மை. இந்த சினிமாவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களை, 'சினிமாவை நாமும் ஒரு பார்க்கலாம்' என தைரியமாக புறப்பட்டு வர வைத்தவர் இந்த மனிதர்தான். சிலருக்கு மட்டுமே சொந்தமானது இந்த திரையுலகம் என்ற நியதியை உடைத்துத் தூள் தூளாக்கியவர் இந்த இமயம்தான்," என்றார்.

அடுத்து பேசிய சிங்கம்புலி, சினிமா என்றை கோட்டையைத் தகர்த்து, என்னைப் போன்ற சாமானியர்களையும் விளைச்சல் பார்க்க வைத்தவர் பாரதிராஜா, என்றார்.

ஏ ஆர் முருகதாஸ் கூறுகையில், "பாரதி ராஜாதான் இன்றைய சினிமாவின் அஸ்திவாரம். அவர் போட்ட பாதையில்தான் இன்று நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவர் எங்களுக்கெல்லாம் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். அப்பாவை அடித்து விளையாட பிள்ளைகளுக்கு உரிமையுள்ளது. அந்த பிள்ளைகளை கண்டிக்கும் உரிமை இந்த அப்பாவுக்குத்தான் உள்ளது," என்று கூற, பாரதிராஜாவின் நெகிழ்ச்சி கண்களில் தெரிந்தது.

அடுத்து பேச வந்த அவர், "இனி எந்த மேடையிலும் பேசவே கூடாது என நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் பாண்டியராஜனுக்காக அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். நான் ரொம்ப உணர்ச்சி வசப்படுவேன். அதுதான் என் பலமும் பலவீனமும்.

இந்த பாரதசிராஜாவுக்கு தொழில்நுட்பம் தெரியாது. இன்றைய இளைஞர்கள் மாதிரி பிரமாண்டம் காட்டத் தெரியாது. ஏதோ எனக்குத் தெரிந்த வித்தையை வைத்துக் கொண்டு சினிமாவில் மனித உறவுகளை, உணர்வுகளைக் காட்டினேன். அந்தப் பாதையை வைத்துக் கொண்டு பயணித்த நீங்கள் நல்ல விதைகளாய் இந்த நிலத்தில் விழுந்து விளைந்தீர்கள். எனவே இதில் என் சாதனை ஒன்றுமில்லை. உங்கள் முயற்சி, உங்கள் வேட்கை உங்களை உயரத்துக்கு கொண்டுசேர்த்துள்ளது.

பாண்டியராஜன் மீது எனக்கு எப்போதும் அக்கறையுண்டு. சினிமாவில் எப்போதும் தன் இயல்பைத் தொலைத்துக் கொள்ளாதவன். பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து பெயரெடுத்தவன். இந்தப் படத்தில் அவன் பிள்ளை ப்ருத்வி நடித்துள்ளான். நன்றாக வருவான். வாழ்த்துக்கள்.

ஒரு உண்மையைச் சொல்றேன். இந்த பாரதிராஜாவுக்கு இப்போது வயசு 70. ஆமா.. எழுபது வயசு. ஆனாலும் இந்த இளைஞர்களின் மேடையில் எனக்கும் இடம் தரப்படுகிறது.

இப்போது சொல்கிறேன், இந்த பாரதிராஜாவின் படம் இன்று வரை தங்களை வழிநடத்துவதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். இனி வரும் தலைமுறையினர் பாடமாக நினைக்கும் அளவுக்கு நான் ஒரு படம் எடுக்கிறேன். அந்தப் படம் இந்த பாரதிராஜாவின் இன்னொரு பரிமாணம்...," என்றார்.

விழாவில் பாரதி ராஜாவுக்கு ஆயிரம் தாமரை மொட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து மரியாதை செய்தார் பாண்டியராஜன்.
 

Post a Comment