மோசடி, கொலை மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

|


சென்னை: சன் டி.வி.யின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வல்லகோட்டை படத்தை தயாரித்த டி.டி.ராஜா கொடுத்த ரூ 1.25 கோடி மோசடி மற்றும் ‘சிந்தனை செய்’ என்ற படத்தின் கிராபிக்ஸ் டிசைனர் அருள்மூர்த்தி கொடுத்த ரூ.11 லட்சம் மோசடி ஆகிய வழக்குகளின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சக்சேனா மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கெனவே தீராத விளையாட்டுப் பிள்ளை பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த சக்சேனாவை, இந்த வழக்குகளிலும் சக்சேனா கைது செய்தனர்.

இவற்றில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். பின்னர் சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சக்சேனா மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

ஏற்கெனவே இருவ வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது அடுத்த இரு வழக்குகளில் சக்சேனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

ஆனாலும் இன்னும் இரு வழக்குகள் அவர் மீது விசாரணையில் உள்ளதால் சக்சேனா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரு வழக்குகளிலும் சக்சேனாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்பு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் கோபிநாத், ‘சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

 

Post a Comment