'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமைப்பாளர் புகார்

|


சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படக்கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ராஜசேகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ராஜசேகரன் என்ற நாகராஜ் (வயது 41) சென்னை போரூரை சேர்ந்தவர். நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்த பரபரப்பான புகார்:

நான் டி.வி. தொடர் இசையமைப்பாளராக உள்ளேன். நடிகர் விக்ரம் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள 'கரிகாலன்' படக்கதை என்னுடைய கதையாகும். அந்த கதையை நான் முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன்.

இந்தக் கதையை வைத்து படம் எடுக்க பல்வேறு படக்கம்பெனிகளை தொடர்பு கொண்டு வந்தேன். இப்போது அந்த கதையை வைத்து என்னிடம் அனுமதி பெறாமல் 'கரிகாலன்' படம் எடுக்கப்படுகிறது. விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 'கரிகாலன்' படம் வெளிவருவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Post a Comment