என் படத்தோட தலைப்பு 'பூக்கடை'ன்னு நானா சொன்னேன்? - மணிரத்னம்

|


தன்னுடைய அடுத்த படத்துக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. அதற்குள் படத்தலைப்பை வைத்து சர்ச்சை கிளப்புகிறார்களே, என்று வருத்தப்பட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

கார்த்திக் மகன் கெளதமை வைத்து அடுத்த படத்துக்கான பணிகளை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்துக்கு தலைப்பு 'பூக்கடை' என கடந்த சில வாரங்களாக மீடியாவில் செய்திகள் வருகின்றன.

ஆனால் மணிரத்னம் தரப்பில் மவுனமாக இருந்தனர். பொதுவாகவே மணிரத்னம் தன் படத்தின் தலைப்பை சொல்வதில்லை. வதந்தி மாதிரி ஆரம்பித்து, மீடியாவே உறுதி செய்தி செய்தியாக போட்ட பிறகு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விளம்பரம் கொடுப்பார் நாளிதழ்களில். அப்போதுதான் அதிகாரப்பூர்வமாக அந்தத் தலைப்பு உறுதியாகும்.

இதை ஒரு விளம்பர டெக்னிக்காக மணிரத்னம் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இருவர், ஆயுத எழுத்து, ராவணன் உள்பட பல படங்களுக்கு தலைப்பு விஷயம் இப்படித்தான் நிகழ்ந்தது.

எனவே இந்த முறை பூக்கடை என்று மீடியாவில் செய்தி வெளியானதும், வழக்கம்போல பின்னர் இந்த தலைப்பை உறுதிப்படுத்துவார் மணிரத்னம் என்று எதிர்ப்பார்த்தனர்.

இந்த நிலையில்தான், பூக்கடை என்ற தலைப்பு தங்களுடையது என இயக்குநர் சரணின் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார்.

இதுபற்றி மணிரத்னத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், என் படத்தோட தலைப்பு 'பூக்கடை'ன்னு நான் சொல்லவே இல்லையே. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்சினை?' என்று சிம்பிளாக கேட்க, பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது.

ஹை... இதுகூட நல்ல டெக்னிக்கா இருக்கே!
 

Post a Comment