செல்லமே தொடர் தனது பயணத்தின் திசையை மாற்றிக்கொண்டுள்ளது. இனி கதைக்களம் பழனி, கேரளா என மாறிவருவதால் அதற்கான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.
ராடான் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பான செல்லமே தொடர் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருவிடை மருதூரில் தொடங்கி தற்போது பழனி, கேரளா என தனது கதைக்களத்தை மாற்றிக்கொண்டுள்ளது.
சினேகாவின் சூழ்ச்சியால் தொலைந்த செல்லம்மாவின் குழந்தை வேறு இடத்தில் வளர்வதாக நம்பிய செல்லம்மா அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து தன் கணவன் வடமலையிடம் தருகிறாள். இதனால் பிரிந்து வாழ்ந்த வடமலையும் செல்லம்மாவும் இணைகின்றனர். இதுவரை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்த செல்லம்மா.. தன் பொறுப்புகளை சுரேஷிடம் ஒப்படைத்து விட்டு, உறவுகளிடம் விடை பெற்று புதிய வாழ்க்கை தொடங்க பழனிக்கு பயணமாகிறாள்.
அங்கே அமைதியான வாழ்க்கையை வேண்டி பழனிக்கு வந்த செல்லம்மாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம் உண்டாகிறது. அங்கு நடக்கும் சம்பவம் செல்லம்மாவின் வாழ்க்கையே புரட்டி போடுகிறது. பழனியில் நடை பெறும் சம்பவம் என்ன..? அந்த சம்பவத்தின் முடிவில் செல்லம்மா எடுத்த முடிவு என்ன..? வடமலை எதற்காக கேரளா பயணிக்கிறான்..? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான முடிவுகளோடு பயணிப்பதே இந்த கதையின் நீண்ட பயணம்.
750வது எபிசோடுகளை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் செல்லமே தொடரின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றபோது ராதிகாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விட்டனர். குறிப்பாக பெண்கள் ராதிகாவை தங்கள் வீட்டு பெண்போல் பாவித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.. தன்னை காண வந்த மக்களிடம் பேசிய ராதிகா, எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப மக்கள் வெள்ளத்துக்கு நடுவில் அமைதியாக படப்பிடிப்பு நடைபெற்றது.
செல்லமே தொடரின் இனிவரும் காட்சிகள் பழனி, கேரளாவில் இருந்து ஒளிபரப்பாக உள்ளதால் கதையில் முக்கிய திருப்பங்களை காணலாம் என்று தொடரின் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா தெரிவித்துள்ளார்.
Post a Comment