புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

|

Scv Attempts Block Puthiya Talaimurai Channel

சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சென்னையின் ஒரு பகுதியில் எஸ்.சி.வியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேவை தெரியவில்லை என்று நேயர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்சிவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டும் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எஸ்.ஆர்.எம் குழுமத்தினரால் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனல் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது. புதிய தலைமுறை டிவியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கை இனப் படுகொலை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் இந்த தொலைக்காட்சியினை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பு தொடங்கிய உடன் சன் நியூஸ் செய்தியின் டிஆர்பி குறையத் தொடங்கியது. இதனால் இரு சேனல்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தினர். எந்த நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல் எங்களுடைய கடமையை தொடர்ந்து செய்வோம் கூறியுள்ளனர். உண்மைக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

Post a Comment