மும்பை: பிக் பி அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி சீசன் 6' சோனி டிவியில் செப்டம்பர் 7 ம்தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. முதல்நாளன்று முதன் நிகழ்ச்சியில் அமிர்தசர்ஸ் நகரைச் சேர்ந்த கன்வர் சுர்டெஜ் சிங் பங்கேற்று 6,40,000 ஆயிரம் ரூபாயுடன் களத்தில் உள்ளார்.
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடிகர் அமிதாப்பச்சனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த நிகழ்ச்சி என்றே கூறப்படுகிறது. அதிக வரவேற்பினை பெற்ற இந்த நிகழ்ச்சி பல சீசன்களைக் கடந்து இப்பொழுது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. வெள்ளிகிழமையன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அறிவின் சக்தியை உணர்த்தும் "Na Roop Kaam Aata Hai,"... எனத் தொடங்கும் பாடலுக்கு நடன இயக்குநர் ரெமோ டி சோஷா நடனம் அமைக்க அமிதாப் பச்சன் குழுவினருடன் நடனமாடி அசத்தினார்.
முதல்நாள் நிகழ்ச்சியில் 21 வயதான பிடெக் மாணவர் கன்வார் சுர்டெஜ் சிங் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை தெளிவாக கூறி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிதாப்பச்சனையும், பார்வையாளர்களையும் கவர்ந்தார். இதுவரை அவரது கையில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உள்ளது. இனி இன்றைய போட்டியில் அவர் கூறும் பதிலைப் பொருத்து பரிசுத் தொகை அதிகரிக்கும்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment