ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி... போயஸ் கார்டனில் குவிந்தது கூட்டம்!

|

12 12 12 Special Rajini Meets His Fans Today

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த தகவல் வெளியில் கசிய ஆரம்பித்ததிலிருந்து கூட்டம் கூட்டமாக போயஸ் கார்டன் நோக்கி புறப்பட்டுவிட்டனர் ரசிகர்கள். காலை 6 மணியிலிருந்தே ரஜினி வீட்டு முன்பு திரள ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

பிறந்த நாளன்று மட்டுமல்ல, பொதுவாகவே ரசிகர்களைச் சந்திப்பதை பல்வேறு காரணங்களுக்காகத் தவிர்த்து வந்தார் சூப்பர் ஸ்டார். வீடு மற்றும் ராகவேந்திரா மண்டபப் பகுதிகளில் ஏற்படும் அசாதாரண நெரிசல் முக்கிய காரணம்.

தன்னால் எந்தவிதமாக இடையூறும் ஏற்பட வேண்டாம் என்பது அவர் எண்ணம். ஆனால் அதையே அவருக்கு எதிரான அஸ்திரமாகப் பயன்படுத்தினர் அவரை விமர்சிப்பவர்கள்.

இந்த முறை ரஜினி பிறந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க 12.12.12 ஆக அமைந்துள்ளது. உலகம் முழுக்க அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். அவரது வீடு தேடி வாழ்த்து மலர்களும் மடல்களும் குவிந்து வருகின்றன.

எனவே இந்த முறை பிறந்த நாளன்று முழுவதும் வீட்டிலேயே இருந்து, வருகின்ற ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறும் முடிவிலிருக்கிறார் ரஜினி.

தனது முடிவை நேற்று மாலையே அவர் ரசிகர்களுக்கு தகவலாகத் தெரிவித்துவிட, அளவிலா உற்சாகத்துடன் அவர் வீடு நோக்கி புறப்பட்டுவிட்டனர் ரசிகர்கள்.

காலை 6 மணியிலிருந்தே வீட்டுக்கு முன் குவிய ஆரம்பித்த கூட்டம், 8 மணிக்கெல்லாம் திமிலோகப்பட ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக பரிசுகள் மற்றும் மலர்க் கொத்துகளுடன் அவர் வீட்டு முன்பு திரண்டு நிற்கின்றனர்.

 

Post a Comment