ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கு உயர வேண்டும் - கமல் ஆசை

|

Kamal Wants See Pc As Pm

சென்னை: நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் குறித்த நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும், சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

 

Post a Comment