சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு தடையை மீறு தியேட்டர்கள் தரும் யாருக்கும் ஒத்துழைப்பு தர மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கமலின் விஸ்வரூபம் படம் வருகிற 11-ந்தேதி ரிலீசாகிறது. அதற்கு 10 மணி நேரம் முன்பு 10-ந்தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச் மூலம் வீடுகளில் ஒளிபரப்பாகிறது. கட்டணம் ரூ 1000. இதற்காக 6 டிடிஎச் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
டிடிஎச் மூலம் பார்க்க ரசிகர்கள் பணம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
கமலின் இந்த முயற்சிக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எங்குமே தியேட்டர் தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும், டி.டி.எச்.சில் வெளியிடும் எந்த ஒரு படத்தையும் எந்த தியேட்டர்களிலும் திரையிடுவதும் இல்லை, விநியோகம் செய்வதும் இல்லை என முடிவெடுத்துள்ளோம் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.
இதற்கிடையில் கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கம் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அங்குள்ள 32 தியேட்டர்களில் படத்தை திரையிடப் போவதாக கூறி, விளம்பரமும் வெளியிட்டுள்ளனர்.
சென்னையிலும்...
அடுத்து அண்ணாசாலையில் உள்ள தேவி காம்ப்ளெக்ஸில் இரண்டு திரையரங்குகளிலும், சாந்தி திரையரங்கிலும் இந்தப் படத்தைத் திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். திருச்சியிலும் ஒரு தியேட்டரில் வெளியாகும் என்று தெரிகிறது.
2000 பேர் வரை உறுப்பினராக உள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சிலர் மட்டும் கட்டுப்பாடுகளை மீறியிருப்பது, பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலர் பன்னீர் செல்வம் கூறுகையில், "கமல் எப்படி தன் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதன் மூலம் தியேட்டர்களை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறாரோ, அதே மாதிரி நாங்களும் அவர் படத்துக்கு தியேட்டர் தராமல் தியேட்டர்களின் எதிர்காலத்தைக் காக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
சங்கத்தின் முடிவை மீறி யாராவது விஸ்வரூபத்துக்கு தியேட்டர்கள் அளித்தால், அவர்களுக்கு எங்களால் எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது," என்றார்.
Post a Comment