அஜீத் எனக்கு எப்போ போன் செய்தார்? கேள்வி கேட்கும் குஷ்பு

|

Ajith Didnt Call Me Says Kushboo

அரசியல் விவகாரங்களில் சிக்கி மீடியாவில் அடிபட்டுக்கொண்டிருக்கும் குஷ்புவிற்கு அஜீத் ஆறுதல் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. இந்த நிலையில் தனக்கு அஜீத் போன் செய்யவில்லை. இது தவறான செய்தி என்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் குஷ்பு. இதுபோன்று தேவையற்ற செய்திகளை வெளியிட்டு ஓவர் டைம் செய்வதை நிருபர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் குஷ்பு கண்டிப்பு காட்டியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி ஆனந்த விகடனில் குஷ்பு கருத்து கூறியதுதான் பிரச்சினையின் ஆரம்பம். இதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆக்சன், திமுக தலைவர் கருணாநிதியின் ரியாக்சன் என கடந்த இருவாரங்களாக ஊடகங்களின் செய்திகளில் அனல்தான். இதனிடையே இன்னொரு மணியம்மை என்று ரிப்போர்ட்டர் செய்தி போடவே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதனைக் கண்டித்து திமுக வினர் குமுதம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குஷ்புவும் டுவிட்டரில் காட்டமாக செய்தியை பகிர்ந்து கொண்டார். நக்கீரன் இதழுக்கு பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில், குஷ்புவுக்கு அஜீத் போன் செய்து ஆறுதல் கூறியதாக நேற்று முழுவதும் செய்திகள் பரபரத்தன. அஜீத் பேசிய செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து, வெவ்வேறு வடிவங்களில் செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன. இந்த தகவலை இன்று மறுத்திருக்கிறார் குஷ்பு.

இன்று அவர் ட்விட் பண்ணியுள்ள தகவலில், அஜீத் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர் எனக்கு போன் பண்ணவில்லை. நான் இருக்க வேண்டிய இடத்தில் நலமே இருக்கிறேன். அவரும் அப்படித்தான். அவர் எதற்காக எனக்கு போன் செய்ய வேண்டும்? இது தவறான செய்தி என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, "சில செய்தியாளர்கள் ‘கற்பனை கோட்டை' தாண்டுவதை எப்போது நிறுத்தப் போகிறார்கள்? எப்போது எனக்கு அஜீத் போன் செய்தார்? இந்த நான்சென்ஸ் செய்தி ஏன் சுற்றி வருகிறது?

மேலும் சில செய்தியாளர்கள் பணியில், ‘ஓவர்டைம்' செய்வதற்காக இப்படியான கதைகளை உருவாக்குகிறார்களோ" என்றும் கேட்டிருக்கிறார்.

 

Post a Comment