சல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு

|

2002 Hit And Run Case Salman Khan Gets Breather

மும்பை: கார் மோதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் இன்று ஆஜராகாத காரணத்தால் வழக்கு விசாரணை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு மும்பை நகரின் பந்தாரா பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்குபேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை 2005-ம் ஆண்டு தொடங்கியது.

வேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக போலீசார் ஆதாரம் அளித்துள்ளனர். இதனையடுத்து சல்மான் கான் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை கோர்ட், இதுதொடர்பாக மார்ச் 11-ம் தேதி சல்மான் கான் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரிக்கும் அமர்வு நீதிபதி யார் என்பது உறுதி செய்யப்படாததால் அன்று சல்மான கான் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

இவ்வழக்கின் விசாரணை இன்று தொடங்கும் என அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. விசாரணையின் போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் கோர்ட்டு வாசலில் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சல்மான் கான் வரவில்லை. அவரது வக்கீல் நீதிபதியின் முன்னர் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இதனையொட்டி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார். சல்மான் கான் மீதான புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment