ஓ மை காட்... அந்தமானுக்கு ஓடி விட்டாரா 'பவர் ஸ்டார்'?

|

Namakkal Police On The Lookout Power Star Srinivasan

சென்னை: செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தப்பி தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது அந்தமான் பக்கம் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில்தான் வசித்து வருகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமி என்பவரிடம் 2008ம் ஆண்டு ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். ஒரு ஆண்டுக்கு பின்னர் பொன்னுசாமிக்கு அவர் செக் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பி வந்து விட்டது.

இது தொடர்பாக நாமக்கல் கோர்ட்டில் பொன்னுசாமியின், மேலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் 2009ம் ஆண்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளி வர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் ஜோதி உத்தரவு பிறப்பித்ததுடன், மார்ச் 26ம் தேதிக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராகா விட்டால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளியாக கருதப்படுவார் என உத்தரவிட்டார்.

கோர்ட் உத்தரவை தொடர்ந்து நாமக்கல் போலீசார் சென்னை சென்று சீனிவாசனை தேடிய போது, அவர் அந்தமானுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் போலீசார் கூறுகையில், நடிகர் பவர் ஸ்டார் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. செக் மோசடி தொடர்பாக அவர் மீது பிரைவேட் கேஸ் கோர்ட்டில் பதிவு செய்துள்ளனர். தற்போது கோர்ட்டில் கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னர், போலீசாரிடம் வந்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

பவர் ஸ்டார் தலைமறைவாகி விட்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஓவர் பில்டப்புடன் பெரும் பரபரப்பான நபராக கோலிவுட்டில் வலம் வருபவர் இந்த பவர்ஸ்டார். தற்போது இவர் மிகவும் குறுகிய காலத்திதற்குள்ளாகவே செக் மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதை விட பேராச்சரியம், யார் கேட்டாலும் அள்ளி அள்ளி பணம் தரக் கூடிய வள்ளல் என்று இவரைப் போற்றுகிறார்கள்.. அப்படிப்பட்டவரா 2 லட்சம் பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டார் என்றும் கேட்கிறார்கள்.

என்ன செய்வது, வழக்கம் போல காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...!

 

Post a Comment