மாற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்... அந்த மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்கிறார் லதா ரஜினிகாந்த்.
சமூக மாற்றத்துக்காக இந்தியாவிற்காக நான் (I Am For India) என்ற அமைப்பை லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கவிழா நேற்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. அதையொட்டி வைபவ் என்ற இரண்டு நாள் கண்காட்சியும் மண்டபத்தில் நடந்தது.
ரஜினி பற்றிய புத்தகங்கள்
நிகழ்ச்சியை லதா ரஜினி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி வெளியாகியுள்ள புத்தகங்கள், அவரது உருவம் பொறித்து வெளியிடப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் ஒரு தனி பகுதியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஐ ஆம் பார் இந்தியா குறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், "மாற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்கிற வரிகளில் அதிக நம்பிக்கை கொண்டவள் நான். அந்த நம்பிக்கையில்தான் இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்க்கையிலும் இருந்து, பலதரப்பட்ட மக்களுடன் பழகி வருகிறேன்.
"கல்வி, ஆரோக்கியம்-உடல் நலம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்," ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும், அதுவும் நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த உயரிய வாழ்க்கை முறையைத் திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்கிற தாகம் எனக்கு உண்டு.
தனி நபர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்கள் மேலும் தனது வாழ்க்கையிலும் அதன் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் ஆகியோரின் நலன் கருதி நமது பாரம்பரிய உணவுகள், தொழில்கள் மற்றும் கலைகளை அடிப்படையாகக் கொண்ட வைபவ் மேளா மற்றும் வைபவ் உணவுத் திருவிழா ஆகியவை நடத்தப்படுகிறது.
என் கணவர் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியான அனைத்துப் புத்தகங்கள், அவரைச் சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் இங்கே பார்வைக்கு வைத்துள்ளோம்..." என்றார்.
Post a Comment