சென்னை: ஸ்டண்ட் நடிகர்கள் வேலை நிறுத்தத்தால் ஏராளமான படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று இயக்குநர் பாராதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
பணி பாதுகாப்பு மற்றும் பணி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டண்ட் நடிகர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல படங்களின் படப்பிடிப்புகள் காலவரையரையின்றி ஒத்திப்போடப்பட்டுள்ளது. இதனால் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாராதிராஜா, இது மிகவும் சிக்கலான பிரச்சினை என்று தெரிவித்தார். சினிமாவில் சண்டைக் கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்று கூறிய அவர், சண்டை கலைஞர்களுக்கு தெலுங்கு, மற்றும் இந்தி படங்களில் பணியாற்றும்போது உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை, பேசி தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல என்றார்.
இதை விட சிக்கலான பல பிரச்சினைகளுக்கு எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருப்பதை தமிழ் திரையுலகில் உள்ள மூத்த கலைஞர்கள் அனைவரும் அறிவார்கள்.
இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக, தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை சண்டை கலைஞர்கள் தவிர்ப்பதில் நியாயமிருப்பதாக எந்த நடுநிலையாளரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
எனவே சண்டை கலைஞர்கள் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பில் உடனடியாக கலந்து கொண்டு தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்கி, இதனால் ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டத்தில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.
பிரச்சினை தீருமா?
இதனிடையே ஸ்டண்ட் நடிகர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு சில தினங்களில் இந்தப் பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு விடும் என்று மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அதன்பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment