சென்னை: அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை ஆட்கொண்ரவு மனுவை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி தன்னை தனது சித்தி பாரதிதேவி பணத்திற்காக கொடுமைப்படுத்துவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்றார். அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கடந்த 8ம் தேதி திடீர் என்று மாயமானார். அவரை யாரோ கடத்திவிட்டதாக அவரது சித்தி பாரதிதேவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சென்னை மற்றும் ஹைதராபாத் போலீசார் அஞ்சலியை தேடி வந்தனர். இந்நிலையில் அஞ்சலி ஹைதராபாத் போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார். அவர் தற்போது புனேவில் தங்கி போல் பச்சன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது.
இந்நிலையில் பாரதிதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் வருவாரா என்று தெரியவில்லை. சென்னை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கிடையே வழக்கை பாரதிதேவி வாபஸ் பெறுகிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து பாரதி தேவியின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், அஞ்சலி வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். போலீசார் அஞ்சலியிடம் விசாரணை நடத்தியதாக எந்த தகவலும் இல்லை. அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை வழக்கை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
Post a Comment