சென்னை: சென்னையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் கைது செய்யப்பட்டார். திருடிய பணத்தில் சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சென்னை வட பழனி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தது. இதில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளி செந்தில் என்ற குபேரனை(32) போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். அவருக்கு திருட்டு வழக்குகளிலும் தொடர்பு உண்டு.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். முதலில் வாய்ப்பு கிடைக்காததால் திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். இருப்பினும் சினிமா தான் எனது கனவு ஆகும். கொள்ளையடித்த பணத்தில் ரூ.20 லட்சத்தை அளித்து சினிமா வாய்ப்பை பெற்றேன். விடலைப்பட்டாளம் என்ற படத்தின் நாயகனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முன்னதாக வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக நடித்துள்ளேன் என்றார்.
இதையடுத்து சினிமா இயக்குனர் ஒருவரையும் மற்றும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Post a Comment