மும்பை: மும்பையில் டிவி நடிகை தாறுமாறாக கார் ஓட்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் 4 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை காந்திவிலி மேற்கு மகாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி பாரிக் (வயது34). இவர் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று காலை 11 மணியளவில் காந்திவிலி கிழக்கு பகுதி நோக்கி தனது காரில் சென்றார்.
திடீரென சாக்ஷியின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து பலமாக மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. பின்னர் சிறிது தூரத்தில் சாக்ஷி காரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.
கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற திலிப் சாந்தாராம் சோனி (30) என்ற வாலிபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மேலும் ஆட்டோ டிரைவர் திலிப்காலு சோனி (43), பயணிகள் ஜெகர் கையும் சித்திக் (21), லவகுஷ் ராம்பரன் யாதவ் (20) மற்றும் அடையாளம் தெரியாத ஒருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு போரிவிலியில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான சாக்ஷியின் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் நடிகை சாக்ஷி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்தில் படுகாயமடைந்த திலிப் சாந்தாராம் சோனி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த காந்திவிலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சாக்ஷியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரேக்கை மிதிப்பதற்கு பதில் தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்து விட்டதால் விபத்து நேரிட்டதாக வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment