ஆபாச சைகை காட்டியதாக பெண் புகார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

|

ஆபாச சைகை காட்டியதாக பெண் புகார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

சென்னை: பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாளரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.

நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். எனினும் விஜய் டிவியில் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனுக்கும் அவரது பக்கத்து வீட்டில் உள்ள ராதா வேணுபிரசாத் (65) என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தரப்பில் கேட்டபோது, இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் வசந்தன், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர்.

புகார் கொடுத்த பெண் கமிஷனர் ஜார்ஜ்க்கு வேண்டப்பட்ட பெண். எனவே எளிதாக என்மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன். அதற்காக என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Post a Comment