தமிழ் சினிமாவுக்கென்று சங்கங்கள் வேண்டும் - பாரதிராஜா

|

தமிழ் சினிமாவுக்கென்று சங்கங்கள் வேண்டும் - பாரதிராஜா

சென்னை: தமிழ் சினிமாவுக்கென்று இனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

சேரன் இயக்கி தயாரிக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. சர்வானந்த் - நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படத்தின் இசைத் தகடு வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, "சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.

ஈழத் தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரியாறுக்காக, கச்சத் தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?

இதற்காகத்தான் தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும் என்கிறோம். தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப்படும்,''என்றார்.

 

Post a Comment