காதலர் கணவரை பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தேடி அலைந்த நடிகை

|

சேலம்: காதலித்து திருமணம் செய்த நடிகையை அவரது கணவர் சேலம் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் பிரியா(23). அவர் நடித்துள்ள நீ உன்னை காதலி மற்றும் ரயில் நகரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. அவர் கோவையைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்ரடரான மணிகண்டன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் தம்பதி சூளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அவர்களின் பெற்றோர்களை அழைத்து மணிகண்டன், பிரியாவுக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து மணிகண்டன் தனது மனைவியை தானே அழைத்துச் செல்வதாக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் பிரியாவுடன் சேலம் அருகே உள்ள குள்ளப்பட்டியில் இருக்கும் தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அன்றைய தினம் தங்கிவிட்டு நேற்று காலை அவர்கள் இருவரும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் இரண்டு பேரும் வேறு வேறு இருக்கைகளில் பயணித்தனர். புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது தான் மணிகண்டன் மாயமானது பிரியாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

 

Post a Comment