விமல்- சூரி மீண்டும் இணைந்து கலக்க வருகிறார்கள், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக.
‘ஜெயம்கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘சேட்டை' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். குளோபல் இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் (விஜயகாந்த் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ!) படத்தை தயாரிக்கிறார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் கண்ணன்.
முதல் பாதி வரை இரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம் என ஆக்ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில், இயக்குனர் கண்ணன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை வரும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விமல் - சூரி ஏற்கெனவே இணைந்த களவாணி, தேசிங்கு ராஜா படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment