சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது லண்டனைச் சேர்ந்த ஒன்டர்புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு.
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் விடுத்த அறிவிப்பில், "சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் கஷ்டப்பட்டு திரைப்படத் துறையில் முன்னேறி சாதனை படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
அவருக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம். இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது.
இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம். அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம்.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம்.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment