ரஜினியின் லிங்கா... தெலுங்கு உரிமையை ரூ 30 கோடி விலை பேசும் விநியோகஸ்தர்கள்!

|

ரஜினியின் லிங்கா படத்தின் தெலுங்கு உரிமைக்கு ரூ 30 கோடிவரை தர தெலுங்கி விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் லிங்கா. ஆனால் அவர் முழுமையாக நடிக்கும் படம் என்றால், எந்திரனுக்குப் பிறகு லிங்காதான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேக்கப் போட்டிருக்கிறார் இந்தப் படத்துக்கு.

ரஜினியின் லிங்கா... தெலுங்கு உரிமையை ரூ 30 கோடி விலை பேசும் விநியோகஸ்தர்கள்!

இந்தப் படத்தில் ரஜினியின் கெட் அப், படத்தின் கதை போன்றவை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்னொரு பக்கம், தொன்னூறுகளில் நடித்தது போல, இந்தப் படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்து வெளியிடும் முடிவில் உள்ளனர் படக்குழுவினர். வெகு வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மைசூரில் கடந்த மே 2-ம் தேதி தொடங்கிய லிங்கா படப்பிடிப்பு, தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே நடந்து வருகிறது.

ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின் ஆகியோர் நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சந்தானம், ஜெகபதிபாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது.

முத்து, படையைப்பா மாதிரி அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்குப் படமாக லிங்கா உருவாகி வருகிறது.

பாதிப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையிலேயே படத்துக்கான வர்த்தகத்தை ஆரம்பித்துவிட்டனர் தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர்கள்.

லிங்காவின் தெலுங்கு ஏரியா உரிமையை ரூ 30 கோடிக்கு விலைபேசி வருகின்றனர். ஏற்கெனவே ரஜினியின் எந்திரன் ரூ 28 கோடிக்கு விற்பனையாகி, ரூ 45 கோடிக்கு மேல் வசூலித்தது நினைவிருக்கலாம்.

கர்நாடகாவில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷே வெளியிடுகிறார். கேரள உரிமையைப் பெறுவதில் பெரும் முனைப்பு காட்டி வருகிறது சத்யம் சினிமாஸ். தமிழகம் மற்றும் உலக அளவிலான வெளியீட்டை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

 

Post a Comment