திருவாரூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது திருத்துறைப்பூண்டியில் விதிமுறைகளை மீறி பேசிப் பிரசாரம் செய்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள அதிமுக நடிகை குயிலி, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
திருத்துறைப்பூண்டியில் ஏப்ரல் 24ம் தேதி நடிகை குயிலி பிரச்சாரம் செய்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி பல பகுதிகளில் இவர் பிரச்சாரம் செய்தார்.
இது தொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் மே 15ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார்.
இதைத் தொடர்ந்து இன்று திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Post a Comment