சென்னை: ரஜினிகாந்த் நடித்த படமான ஆயிரம் ஜென்மங்கள் கதையைக் காப்பியடித்து அரண்மனை படத்தை எடுத்த சுந்தர் சி, அந்த கதையின் உரிமைக்காகத் தருவதாகக் கூறிய ரூ 50 லட்சத்தைத் தராமல் மோசடி செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் தயாரிப்பாளர் முத்துராமன்.
ரஜினிகாந்த், லதா நடித்து நீண்ட ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஆயிரம் ஜென்மங்கள். அன்றைக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.
பேய் பிடித்த தங்கையையும் அவள் கணவனையும் ஒரு அண்ணன் காப்பாற்றும் கதை இது.
அரண்மனை படமும் பெருமளவு இதே போன்ற கதைதான். ஆனால் எடுத்த விதம், காட்சி அமைப்புகள் சற்றே வித்தியாசப்பட்டிருந்தன.
படம் வெளி வருவதற்கு முன்பே, ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையை மூலமாக வைத்துதான் அரண்மனை படம் உருவாக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இப்போது படம் வெளியாகி சில மாதங்கள் கடந்த நிலையில், ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளரான முத்துராமன் என்பவர் சுந்தர் சி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், அரண்மனை படத்தின் கதைக்காக தனக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு தருவதாகவும், படத்தின் தெலுங்கு மற்றும் கன்னடப் பட உரிமையிலும் தனக்கான பங்கை தருவதாகவும் உறுதியளித்த சுந்தர் சி, இதுவரை எதுவுமே தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் ஆயிரம் ஜென்மங்கள் கதையை தெலுங்கு மற்றும் இந்தியில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த தன்னை, அப்படிச் செய்ய விடாமல் தடுத்து ரூ 50 லட்சமம தருவதாக சுந்தர் சி வாக்குத் தந்ததாகவும், இப்போது வாக்கை மீறிவிட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment