விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களை தண்டிக்கக் கூடாது!- நடிகர் சந்தானம் பேட்டி

|

மதுரை: விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களைத் தண்டிக்கக் கூடாது என்று திரைப்பட நடிகர் சந்தானம் கூறினார்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஜூன் 12-ல் வெளியாகவுள்ள 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் மேலும் கூறியது:

Dont punish artists for appearing in ads, says Santhanam

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நல்ல திரைப்படங்கள்கூட 2 வாரங்கள் மட்டுமே திரையிடக்கூடிய நிலை உள்ளது.

தமிழகத்தில் திரைப்பட ரசிகர்கள் ரசனை தற்போது மாறிவிட்டது. இதனால் திரைப்படங்களை தரமானதாகத் தயாரிக்கும் பொறுப்பு அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி-தோல்வியை ரசிகர்களே தீர்மானிக்கின்றனர். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இந்த திரைப்படத்தின் மையக் கருத்து. நான் நகைச்சுவை நடிகர், கதாநாயகன் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் குணச்சித்திர வேடம் அல்லது வில்லன் வேடம் கிடைத்தால்கூட நடிப்பேன். நல்ல நடிகன் எனப் பெயர் வாங்கவே ஆசைப்படுகிறேன்.

நான் தயாரித்துள்ள முதல் திரைப்படம் இது. ஒரு தயாரிப்பாளராக இது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. நல்ல கதை கிடைத்தால் தயாரிப்பு பணிகளைத் தொடருவேன். திரைப்படம் இயக்கும் ஆசையும் உள்ளது. விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். அரசியலில் ஈடுபடுவது எதிர்காலத்தில் நடப்பதைப் பொருத்தே தீர்மானிக்கப்படும்.

இளைய தலைமுறை நடிகர்களிடையே போட்டி உணர்வு இல்லை. அதனால்தான் பல நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் நடிப்பது சாத்தியமாகியுள்ளது.

விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்கள் தண்டிப்பது சரியான அணுகுமுறை அல்ல. சந்தையில் விற்பதற்கு ஏதுவான பொருள் என அரசங்கம் சான்றளித்த பிறகே அதை விளம்பரப்படுத்த விளம்பர நிறுவனங்கள் நடிகர்களை அணுகுகின்றனர். பின்னர் எப்படி இத்தகைய தவறுகளுக்கு நடிகர்கள் காரணமாக முடியும்?" என்றார் சந்தானம்.

 

Post a Comment