சென்னை: தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் கண்டிப்பாக வரும், விரைவில் அதற்கான பணிகளை நான் தொடங்கவிருக்கிறேன் என்று இயக்குநர் மோகன் ராஜா அறிவித்திருக்கிறார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி , நயன்தாரா ,கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் மாபெரும் ஹிட்டடித்த படம் தனி ஒருவன்.
அரவிந்த் சாமியின் வித்தியாசமான வில்லத்தனங்கள், ஜெயம் ரவியின் போலீஸ் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. விளைவு இந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிசை சூறையாடிய படங்களின் வரிசையில் தனி ஒருவனும் இணைந்து கொண்டது.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், வசனங்களும் ரசிகர்களிடம் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் பாடல் வரிகள், ஹிப்ஹாப் தமிழாவின் இசை ஆகியவை படத்திற்கு துணை செய்ததில் இன்றும் கூட படம் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு ஏன் எடுக்கக்கூடாது கண்டிப்பாக எடுப்பேன்.
ஹாலிவுட்டில் மட்டும் தான் ஜேம்ஸ் பாண்ட், பேட் மேன் போன்ற படங்கள் வரவேண்டுமா, தமிழில் வரக்கூடாதா எனக் கேட்டிருக்கிறார். இதன் மூலம் தனி ஒருவன் பார்ட் 2 வருவது உறுதியாகியிருக்கிறது.
திரிஷ்யம் படத்தைத் தொடர்ந்து 5 மொழிகளில் தனி ஒருவன் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கவிருக்கிறார். ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கலாம் என்று உறுதியற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நேரத்தில் மோகன்ராஜாவின் தனி ஒருவன் பார்ட் 2 அறிவிப்பு திரையுலகில் சற்று பரபரப்பையும், ரசிகர்களிடையே ஆர்வத்தையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது.
நல்ல படங்கள் கண்டிப்பாக ரசிகர்களின் மனதை வெல்லும்.
Post a Comment