எஸ் ஷங்கர்
நடிகர்கள்: நயன்தாரா, ஆரி, மைம் கோபி, ரோபோ சங்கர், லட்சுமி பிரியா, ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
இசை: ரான் ஏதன் யோஹன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
இயக்கம்: அஸ்வின் சரவணன்
பேய்ப் படங்களில் சற்று வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் மாயாவில். ஆனால் அதற்காக நயன்தாராவை கோரமாகக் காட்டி ரசிகர்கள் மனசை 'நோகடிக்காமல்' துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி காட்டி ஆறுதல் தருகிறார்கள்.
வித்தியாசமான கதைதான்.
நயன்தாராவும் அவர் கணவரும் நடிகர்கள். இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேற்றுமை வர, கைக்குழந்தையுடன் போய் தோழியின் வீட்டில் தங்கிக் கொள்கிறார் நயன்தாரா. தோழி வீட்டில் அவ்வப்போது ஏதோ அமானுஷ்யமாக நடப்பதை உணர்கிறார். ஆனால் அதை மேற்கொண்டு ஆராயாமல், பிழைப்புக்கு வழி தேட ஆரம்பிக்கிறார். பணக்கஷ்டம் அதிகரிக்கிறது. இவரது தோழி ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்க்கிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாகப் பார்த்தால் ரூ 5 லட்சம் பணம் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்.
இதற்கு இணையாக இன்னொரு கதை... அதில் ஓவியராக வரும் ஆரி, ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறார். அந்தப் பத்திரிகையில் மாயவனம் என்ற ஒரு மர்ம காட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு மனநோயாளிகளுக்கென்று ஒரு மருத்துவமனை இருந்திருக்கிறது. அங்கு நோயாளிகளை ஆராய்ச்சி என்ற பெயரில் மிகக் கொடூரமாகக் கொன்று அங்கேயே புதைத்திருக்கிறார்கள். அங்கு வைத்து சிதைக்கப்பட்ட மாயா என்ற பெண், இவர்களது ஆராய்ச்சியால் பார்வையிழந்து, கைக் குழந்தையை அநாதையாக விட்டு இறக்கிறாள். அவள் கையில் போட்டிருந்த பல கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தோடு புதைக்கப்படுகிறாள்.
இவையெல்லாம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, மாயவனம் காட்டுக்குள் அந்த மோதிரத்தைத் தேடி, புதைக்கப்பட்ட ஒவ்வொரு குழியையும் தோண்டுகிறது ஒரு கும்பல். அப்போது மாயாவின் சவக்குழியையும் தோண்டும்போது, அந்த ஆவி கிளம்புகிறது...
பேய்ப் படத்தைப் பார்க்கும் நயன்தாராவும், இந்த மாயவனம் காட்டுக்கு வந்துவிடுகிறார்... அது எப்படி என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
படம் முழுக்க நயன்தாராவின் ராஜ்ஜியம்தான். அலட்டலில்லாத நடிப்பு. ஒரு படத்தில் நாயகித் தேர்வுக்கு வரும் நயன்தாராவுக்கு இயக்குநர் டெஸ்ட் வைக்க, அதில் நயன்தாராவின் நடிப்பு... அடேங்கப்பா. நயன்தாரா எப்படி இத்தனை ஆண்டுகள் முன்னணி நாயகியாகத் திகழ்கிறார் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும்... பானை சோற்றுக்குப் பதம்!
கொடுத்த வேலையை வரம்பு மீறாமல் இயல்பாகச் செய்திருக்கிறார் ஆரி.
இயக்குநராக வரும் மைம் கோபி, அவரது உதவி இயக்குநராக வரும் லட்சுமி பிரியா, ஆரியின் காதலியாக வரும் ரேஷ்மி மேனன் என அனைவருமே மிகக் கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளனர். வெல்டன்!
பேய்ப் படங்களுக்கே உரிய த்ரில் காட்சிகள் அங்கங்கே வருகின்றன. ஆனால் அந்த த்ரில்லை சாதாரணமாக்கிவிடுகின்றன நீ...ளமான படமாக்கம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நீட்டி முழக்கி இருப்பது, படத்துக்குள் ரொம்ப நேரம் உட்கார்ந்த அலுப்பைத் தருகின்றன.
மாயவனம் காட்டை சென்னைக்குப் பக்கத்தில் 13 கிமீட்டரில் இருப்பதாகக் காட்டுகிறார்கள். குறைந்தது 50 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்த மாதிரி காடுகளே இல்லையே... கொஞ்சம் பொருத்தமாக பொய் சொல்லக் கூடாதா?
தலைநகருக்கு அத்தனை கிட்டத்தில் உள்ள மாயவனம் காட்டுக்குள் நடப்பதாக சொல்லப்படும் சம்பவங்களை அரசும் போலீசும் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தன?
அங்கு படமாக்கப்பட்டுள்ள காட்சிகளில் செயற்கை இருள் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. எதற்காக பாதிப் படத்தை கறுப்பு வெள்ளையில் காட்டினார்களோ...
இப்படி குறைகளை அடுக்கலாம்.
ரான் ஏதன் யோஹனின் பின்னணி இசை த்ரில் காட்சிகளில் மிரட்டுகிறது. ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
அஸ்வின் சரவணன் தன் முதல் படத்தையே, பாதுகாப்பான பேய்ப் படமாகக் கொடுத்து தப்பித்திருக்கிறார்.
Post a Comment