1/18/2011 12:11:33 PM
தமிழக அரசின் கலை - பண்பாட்டு துறை சார்பில் ஜெயகாந்தன், இளையராஜா, பத்மா சுப்பிரமணியம் ஆகியோருக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2007 - 2008ம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை மானிய கோரிக்கை மீது தமிழக சட்டப்பேரவையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இயல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத்துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டிய கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரஸ்வதி விருது என மூன்று விருதுகளை ஆண்டுதோறும் வழங்க முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின்படி முதல் முறையாக இந்த ஆண்டில் இயல் துறையில் சிறந்த எழுத்தாளராகிய ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கவும், திரை இசைக்கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கவும், நாட்டிய கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு பாலசரசுவதி விருது வழங்கவும், இந்த விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment