4/11/2011 12:25:30 PM
தமிழ், தெலுங்கு படங்களை ரீமேக் செய்வது மட்டுமல்லாமல் தென்னிந்திய டெக்னீஷியன்களைப் பயன்படுத்துவதும் இந்தி சினிமாவில் தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு மொழியில் ஹிட்டாகும் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான். இது பல வருட காலமாக நடந்து வருகிறது. தென்னிந்திய மொழிப் படங்களை இந்தியில் ரீமேக் செய்வது ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன், இந்த போக்கு திடீரென்று குறைந்தது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சில படங்கள் சரியாக ஓடாததால் ரீமேக் மவுசு குறைந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது தமிழ், தெலுங்கு படங்களை ரீமேக் செய்வது இந்திப் பட உலகில் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல், தென்னிந்திய டெக்னீஷியன்களைப் பயன்படுத்தும் போக்கும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆமிர்கான் தமிழ் 'கஜினி'யை ரீமேக் செய்த போது, தமிழில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாசையும் அந்த படத்தில் நடித்த அசினையும் இந்திக்கு கொண்டு வந்தார். இந்தப் படத்தில் நடித்ததால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் புகழடைந்தார் அசின். அடுத்து, தமிழில் வெளியான 'போக்கிரி', சல்மான் கான் நடிப்பில் 'வான்டட்' என்ற பெயரில் ரீமேக் ஆகி ஹிட்டானது. இதை தமிழில் இயக்கிய பிரபுதேவாவே இந்தியிலும் இயக்கி இருந்தார். இந்தப் படங்கள் ஹிட்டானதை அடுத்து, இப்போது 'உத்தமபுத்திரன்' படம் 'ரெடி'யாகவும் 'சிங்கம்' அஜய்தேவ்கன் நடிப்பிலும் 'காக்க காக்க' ஜான் ஆபிரகாம் நடிப்பிலும் 'சுப்ரமணியபுரம்' படம் 'கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்' என்ற பெயரிலும் ரீமேக் ஆகி வருகின்றன. இதே போல நான்கு தெலுங்கு படங்களும் இந்தி ரீமேக்கில் இருக்கின்றன. தமிழ் ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தியில் நடித்துள்ளனர். சித்தார்த், தெலுங்கு ஹீரோ ராணா, நடிகைகள் ஜெனிலியா, காஜல் அகர்வால், இலியானா, நேகா சர்மா, டாப்ஸி ஆகியோர் இந்தியில் இப்போது நடித்து வருகின்றனர். தீபிகா படுகோன், தமிழில் வெளியான 'சினேகிதியே' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 'ஐஸ்வர்யா' என்ற கன்னடப் படத்தில் நடித்தார். இப்போது முழுவதும் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி பட வர்த்தக ஆலோசகர் அமோத் மெஹ்ரா கூறும்போது, 'வைஜயந்திமாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தென்னிந்திய படங்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் பாலிவுட்டில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால், இடையில் திடீரென்று அந்த போக்கு மறைந்தது. இப்போது, 'கஜினி', 'வான்டட்' படங்கள் ஹிட்டானதை அடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களுக்கான மவுசு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது' என்றார்.
Post a Comment