திரிஷாவை அழைக்கிறது போஜ்பூரி!

|


திரிஷாவின் சேவை எங்களுக்குத் தேவை என்று போஜ்பூரி திரையுலகிலிருந்து அழைப்பு மேல் அழைப்பு வந்தவண்ணம் உள்ளதாம்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சான்டல்வுட், மல்லுவுட் என ஏகப்பட்ட மல்லுக்கட்டுகள் இந்தியத் திரையுலகில் கோலோச்சி வருகின்றன. இந்த மாபெரும் மலைகளுக்கு மத்தியில் சின்ன மடுவாக இருந்தாலும், போஜ்பூரி திரையுலகமும் படு பிசியாக இருந்து வருகிறது.

இங்கு நடிக்காத தென்னிந்திய நடிகைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் லீடிங்கில் இருந்த நடிகைகள் எல்லாம் இங்கும் போய் பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நக்மா போஜ்பூரியில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்தார். பின்னர் ரம்பாவும் போய் நடித்தார். இந்த நிலையில் தற்போது திரிஷாவைத் தேடி போஜ்பூரிக்காரர்கள் ஓலை மேல் ஓலை அனுப்பியவண்ணம் உள்ளனராம்.

எல்லாம் தமிழ், தெலுங்கு, இந்தியைத் தாண்டி வேறு படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு திரிஷா வந்ததுதான் காரணம். சமீபத்தில் அவர் தர்ஷனுக்கு ஜோடியாக கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதையடுத்தே போஜ்பூரி படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளதாம்.

ஆனால் இன்னும் திரிஷா அதுகுறித்து முடிவெடுக்கவில்லை. தென்னிந்தியாவில் பீல்ட் அவுட் ஆனவர்கள்தான் வழக்கமாக போஜ்பூரிக்குப் போகிறார்கள் என்பதால் இப்போதே அந்த நிலைக்கு தான் ஆளாவதை திரிஷா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இனிமேல் தன்னைக் கவரும் கதை இருந்தால் தமிழ், தெலுங்கு தவிர பிற மொழிகளிலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு திரிஷா வந்துள்ளதாக தெரிகிறது.

அதானே, நடிப்புச் சேவைக்கு மொழியேது...!
 

Post a Comment