'ஈரம்' படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கும் படம் 'வல்லினம்'. நகுல், பிந்து மாதவி, அதுல் குல்கர்னி உட்பட பலர் நடிக்கின்றனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் 72 மணிநேரம் செங்கல்பட்டு அருகே நடந்துள்ளது. இதுபற்றி இயக்குனர் அறிவழகனிடம் கேட்டபோது கூறியதாவது: இது பேஸ்கட் பாலை மையப்படுத்திய ஆக்ஷன் கதை. தமிழில் அதிகமாக ஸ்போர்ட்ஸ் படங்கள் வரவில்லை என்றாலும் இது முற்றிலும் அது தொடர்பான கதை கிடையாது. கமர்சியல் அம்சங்கள் நிறைந்த கதை. படத்தில் ரயில் தொடர்பான காட்சி முக்கியமானதாக வருகிறது. இதனால் சிறப்பு அனுமதி பெற்று, செங்கல்பட்டில் ஷூட்டிங் நடத்தினோம். இந்தி நடிகர் அதுல் குல்கர்னி வேறு படத்துக்கு செல்ல வேண்டி இருந்ததால் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். 72 மணிநேரம் ஷூட்டிங் தொடர்ந்து நடந்தது. நகுல், நான் உட்பட எல்லோருமே சோர்வடைந்து விட்டோம். இதுவரை இப்படி யாரும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்களா தெரியவில்லை. தமன் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். இவ்வாறு அறிவழகன் கூறினார்.
Post a Comment